அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார். இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும் உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும்...