தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது.
சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.
நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.
பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும்.
நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி 45 நிமிடங்கள் கொஞ்சம் திணறும். அதனை தவிர்த்துவிட்டால் படம் நெடுக வரும் கதாபாத்திரங்கள் இந்திய திரையுலகில் நாம் கண்டிராத ஒன்று.
பாலாவின் படங்களில் எனக்கு ஆச்சர்யம் நாச்சியார். விடலை காதலையும் ஒரு அதிகாரியின் உச்சபட்ச நேர்மையும் தமிழ் சினிமா பார்க்காத வகையில் காட்டி இருந்தார்.
தாரை தப்படை படமாக நம்மை கவரவில்லை என்றாலும் இடையே படம் காட்டிய எளிமையான தமிழ் இசை கலைஞர் வாழ்வு இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத, காட்சிப்படுத்தி இருக்காத ஒன்று.
பாலாவின் பெரிய பலம் அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள். நாம் நம் வாழ்வில் பாத்திராத தன்மையில் இருக்கும். அல்லது பார்த்த கதாபாத்திரம் வேறு வடிவில் இருக்கும். முக்கியமான ஒன்றாக அவர்கள் எல்லாரும் நமக்கு தெரியாத விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள். பிதாமகன் சூர்யா கேரக்டரை நாம் காமெடியில் பார்த்திருப்போம். ஆனால் அவர் பிரதான கதாபாத்திரமாக உருவாக்கி இருப்பார். தமிழ் சினிமா பார்த்து மிரண்டு போன கஞ்சா வியாபாரி அந்த படத்தில் இருப்பார்.
பாலாவை சுற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால் இப்படியான ஒரு இயக்குனருக்கு அப்படி இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ரசிகனுக்கு அவர் காட்ட விரும்பும் உலகமும் மனிதர்களும் வேறாகவே இருக்கும் போது அப்படித்தான் அமையும் போல.
சில ஈரானிய கொரிய மலையாள படங்கள் ரா மெட்டீரியலாக இருக்கும். அவர்கள் உருவாக்கும் கதைக்களம் கதை நாயகன் எல்லாமே கொஞ்சம் பிசகியே இருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறது. பல நடிகர்களின் திரையுலக வாழ்வின் வெற்றியை பாலா படத்திற்கு முன் படத்திற்கு பின் என பிரிக்க முடியும். அப்படியொரு தன்மையை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தவர் பாலா.
பாலா தமிழ் சினிமாவின் உண்மையான பொக்கிஷம் தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக