தமிழ்நாட்டில் “பிளைண்ட்” பாலிடிக்ஸ் அதிகம். தனக்கு பிடித்தவர் சொல்கிறார் அதுதான் வேதவாக்கு என நம்பி பேசி அலையும் அரசியல்.
நீட் தேர்வு :
நீட் தேர்வால் ஊழல் ஒழிப்பு, ஏழைகள் படிக்கலாம், கல்லூரிகளில் லஞ்சம் வாங்க முடியாது என உருட்டுவார்கள். கொஞ்சம் நெருங்கி அடுத்தடுத்து கேள்வி கேட்டால் தப்பி ஓடுவார்கள் இந்த மூடர்கள். நாம் கொஞ்சம் பேசிப்பார்ப்போம்.
நீட் தேர்வும், ஐ.ஏ.எஸ் தேர்வும் ஒன்றா ? இல்லை. ஐஏஎஸ் தேர்வு வேலைக்கானது. நீட் தேர்வு படிப்புக்கானது.
சரி. நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் ஒன்றா ? அதுவும் இல்லை. ஜேஇஇ என்பது குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே சேருவேன், அதுதான் தகுதி, தரம், எனக்கான வாய்ப்பு என்பவர்களுக்கான தேர்வு. அதுவும் நீட்டும் ஒன்றல்ல.
எனில் நீட் யாருக்கு ? நீட் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்பவர்களுக்கான தேர்வு. இந்தியாவில் உள்ள மருத்துவம் படிக்க விரும்பும் எவரும் இந்த தேர்வை எழுத வேண்டும்.
ஏன் எழுதினால் என்ன ? ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு படிப்பு இருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட படிப்புகள் இருக்கும் போது ஒரு படிப்பை அடிப்படையாக கொண்டு தேர்வு நடத்துவது என்பது முரண்பாடானது.
நீட் தேர்வால் ஊழல் கமிசன் டொனேசன் ஒழிக்கப்பட்டது என்கிறார்களே அது உண்மையா ? நீட்டுக்கு முன்னர் எப்படி மருத்துவ படிப்புக்கு தேர்வு நடைபெற்றது என்பது புரிய வேண்டும்.
12ம் வகுப்பு மதிப்பெண்ணில் அறிவியல் பாடங்கள் அடிப்படையில் அதன் கூட்டுதொகை அடிப்படையில் கட் ஆஃப் அறிவிப்பார்கள். இது அவர்கள் எந்த வகை கல்வியில் படித்தாலும் பொருந்தும். அந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். உதாரணத்திற்கு மூன்றுக்கும் சேர்த்து கூட்டி வகுத்து பெருக்கி ( அது தனி பிராசஸ் அது பதிவிற்கு தேவையில்லை என கடக்கிறேன் ) 199.88 கட் ஆஃப் முதல் மதிப்பெண் என்பார்கள். ( புரிந்துகொள்ளும் உதாரணத்திற்கு சொல்கிறேன் எண்ணிக்கை உண்மையல்ல ) இதிலிருந்து குறைந்து கொண்டே வரும். எத்தனை இடங்கள் இருக்கிறதோ அத்தனை வரை மதிப்பெண் வரும். இதுதான் முறை.
தனியார் கல்லூரிகளிலும் இதான் முறையா ? ஆம். இங்கே கல்லூரிகள் இடங்கள் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரண்டு இருக்கிறது. அரசு உதவி பெறும், தனியார் கல்லூரி. முழுமையான தனியார் கல்லூரி. தனியார் கல்லூரியில் 100 இடங்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ( எண்ணிக்கைகள் உதாரணம் ) அதில் 30 இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும். அடுத்து இருபது இடங்களை ஒன்றியத்திடம் கொடுத்துவிடும். மீதி ஐம்பது அந்த தனியார் கல்லூரிக்கு நிர்வாகத்திற்கு மட்டுமே. அரசு கல்லூரிகளில் எல்லா இடமும் அரசுக்கு மட்டுமே. ஒன்றிய அரசுக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு உண்டு. சில தனியார் கல்லூரிகளில் அரசுக்கு இடமுண்டு, சில கல்லூரிகளில் இடமில்லை. இந்த அரசு ஒதுக்கீடு இடங்களில் இடஒதுக்கீடு முறை உண்டு. அந்த மெனேஜ்மெண்ட் சீட்டும் அரசு இடங்களில் எந்த கட் ஆஃபில் முடிகிறதோ, அதற்கடுத்து தான் சேர்க்க முடியும். உதாரணத்திற்கு 179.65 மதிப்பெண் உடன் அரசு கல்லூரி சீட் முடிகிறது. 179 எடுத்தவருக்கு அரசு சீட்டில் இடம் கிடைக்காது. அவர் தனியார் கல்லூரிக்கு செல்வார், அவரிடம் கல்விக்கட்டணம் இவ்வளவு டொனசன் இவ்வளவு என்பார்கள் முடிந்தால் அவர் கட்டுவார். முடியாவில்லை அவர் வேறு படிப்புக்கு செல்வார். அவருக்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர் வருவார். இப்படித்தான் நிரப்ப முடியும்.
நீட் என்ன செய்தது ?
நீட் இதெல்லாம் கிடையாது என ஒரு தேர்வு கொண்டு வந்தது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 75,000 மருத்துவ சீட்டுகள் என வைத்துகொள்ளுங்கள். இதே போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கும். எல்லாம் சேர்த்து 10 லட்சம் என வைத்துக்கொள்ளுங்கள். நீட் நிர்வாகம் தேர்வு நடத்தும். 12ம் வகுப்பு முடித்த (பெயிலானவர்கள் கூட எழுதலாம், இந்த தேர்வை 4 ஆண்டுகளுக்கு எழுதலாம், ) யாரும் எழுதலாம் என அறிவித்தார்கள். 22 லட்சம் பேர் எழுதுவார்கள். தேர்வு சிபிஎஸ்இ பாட முறையில் நடைபெறும். மொத்த மதிப்பெண் 600 என வைத்துக்கொள்ளுங்கள். எல்லாருக்கும் ரேங்க் அடிப்படையில் மார்க் வெளியாகும். முதல் மதிப்பெண் 599 என்றால் கடைசி மதிப்பெண் 197 என நிர்ணயம் செய்வார்கள். அதாவது 4 லட்சம் சீட்டுக்கு 18 லட்சம் பேர் தகுதி என்பார்கள். ரேங்க அடிப்படையில் அரசு சீட்டுகள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பபடும். அடுத்து ஒன்றிய அரசின் இடங்கள் நிரப்பபடும்.
தனியார் கல்லூரிகள் வரிசைப்படி கொடுக்க வேண்டுமென்ற விதி கிடையாது. ஒரு கல்லூரியில் 467 மதிப்பெண் எடுத்த ஒருவர் 20 லட்சம் தருகிறேன் என்றால் அவரை தவிர்த்து 199 எடுத்து 50 லட்சம் தருகிறேன் என்பவருக்கு சீட்டு தரலாம். ஏனெனில் பாஸ் தான் முக்கியம். மதிப்பெண் முக்கியமில்லை. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நீட் தனியார் கல்லூரிகளின் அட்சய பாத்திரமென.
சரி பள்ளி மதிப்பெணுக்கு எதுவும் மரியாதை உண்டா என்றால் கிடையாது. நீட் மதிப்பெண் மட்டுமே முக்கியம். சிபி எஸ் இ பள்ளிகளுக்கு 9ம் வகுப்பில் இருந்தே நீட் கோச்சிங் அப்டிடியூட் என நடத்தி வருகிறார்கள் பெருங்கட்டணத்தில். இவர்களோடு அரசு பள்ளி மாணவர்கள் எப்படி போட்டி போடுவார்கள்.
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மருத்துவம் சேர்ந்த போது அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 3546. சிபிஎஸ் இ பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 62. நீட் வந்த பிறகு சிபிஎஸ் இ மாணவர்களுக்கு கிடைத்த எண்ணிக்கை 1,220. இந்த இடம் யாரிடம் இருந்து பறிக்கப்பட்டது என நினைகிறீர்கள். எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை.
நீட் தேர்வு என்பது என்பது தனியார் கோச்சிங் செண்டர்கள் வளர்ச்சிக்கு, சிபிஎஸ்இ மாணவர்கள் வளர்ச்சிக்கு, தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனர்கள் வளர்ச்சிக்கு மட்டுமே. தேர்வின் நோக்கமே குறிப்பாக தென் இந்தியாவில் மாணவர்களை உளவியல் ரீதியாக சிதைத்தல் என்பது மட்டுமே. தேர்வு எழுதியவர்களிடம் கேளுங்கள் அவர்களை அலைக்கழித்த கதை, தேர்வு டிக்கெட்டை டவுண் செய்ய அலைந்த கதை, அது ஃபேக் என திரும்பி அனுப்பிய கதைகள் என சொல்லுவார்கள்.
இந்த ஆண்டு மட்டுமே 22 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்யவில்லை .தேர்வு எழுதி அதன் மாடல் ஆன்சர் பேப்பர் பார்த்து அதில் நல்ல மதிப்பெண் வந்து, அடுத்து டாக்டர் என கனவில் இருக்கும் போது, நீங்கள் எழுதிய தேர்வு செல்லாது என அரசு அறிவித்தது. அந்த அழுத்தத்தில் இவர்கள் இறந்து போனார்கள். இதில் பாதி பேருக்கு மேல் இது மூன்றாவது முறையாக நீட் எழுதியவர்கள். தேர்வு தாள் எல்லாம் ராஜஸ்தான் , குஜராத் என பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டுமே லீக்காகிறது.
இதில் இன்னொரு ஆச்சர்யம், இரண்டாம் கட்ட தேர்வில் வட இந்தியாவில் அதிக மதிப்பெண் பெறுவதும் தென் இந்தியாவில் குறைவான மதிப்பெண்னு சொல்லி வைத்தார் போல நடைபெறுகிறது. 2024ல் நீட் கேள்வித்தான் லீக்கானதுக்கு இதுவரை ஒருவர் மீதும் நடவடிக்கை இல்லை. அதற்கு காரணமான கோச்சிங் செண்டர் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 2026ல் லீக்காகி இதுவரை எந்த நடவடிக்கையும் கிடையாது. கைதானவர்கள் எல்லாம் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் தான். 2024ல் அரசு ஒரு கமிட்டி போட்டது. அது இப்போது வரை வாய் திறக்கவில்லை. இந்த ஆண்டு இந்தியாவின் விமானப்படை தான் கேள்வித்தாளை கொண்டு சென்றது. அப்போதும் நிலைமை மாறவில்லை.
சரி நீட் காங்கிரஸ் தானே கொண்டு வந்தது. ஆம். ஆனால் அது கொண்டு வந்த நீட் வேறு. ஒவ்வொரு மாநில அரசு தனியார் கல்லூரிகளில் குறிப்பிட்ட அளவு சீட்டுகள் ஒன்றியத்துக்கானது. இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்தில் திரட்டினால் பல பத்தாயிரம் சீட்டுகள் வரும். அந்த சீட்டுகளில் சேர விரும்புவோர் எழுதலாம் என்றே முதலில் கொண்டுவந்தார்கள். அதில் பார்த்த லாபம் பிஜேபியை சுரண்டி திங்க வைத்துவிட்டது.
நீட் தேர்வு என்பதே கல்வியைவிட்டு எளியவர்களை ஒதுக்கி வைப்பதுதான். மருத்துவம் என்பது கனவு படிப்பு. அந்த கனவை யார் காணலாம் என ஒரு சித்திரத்தை நீட் தீட்டுகிறது.
நாம் கேட்பது எல்லாம் நீட் வேண்டாம். பழையபடியே அவர்கள் பள்ளியில் படித்த ( அரசு பள்ளி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிகுலேசன், ஆங்கில வழிகல்வி, சிபி எஸ் இ, இண்டர்நேசனல் பள்ளிகள், ஆசிரம பள்ளிகள், மொழி வழி பள்ளிகள் ) 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பை அனுமதியுங்கள் என்பதுதான்.
அமைச்சர் பதவி விலகுவது, ஒரு கோடி கொடுப்பது எல்லாம், சொறிந்துவிடுவது மட்டுமே. புண்ணை ஆற்றும் வழியல்ல. சுரண்டி விட்டு புண்ணாக்கும் வேலைதான்.
#BanNEET

கருத்துகள்
கருத்துரையிடுக