பாலூட்டி இனங்கள் என எடுத்துக்கொண்டால் மனிதன் தான் கடைசி என நினைக்கிறேன். அப்படியிருக்கையில் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு உணர்வு உண்டு அது தங்களால் இந்த உயிர் வந்திருக்கிறது குறிப்பிட்ட காலம் வரை நான் பேணி வளர்க்க வேண்டும். பிறகு அதன் வாழ்வை அது பார்த்துக்கொள்ளும் என்ற அறிவு உண்டு. கடைசி காலத்தில் நாம போட்ட முட்டையில இருந்து வந்த புறா நம்மை பார்த்துக்கொள்ளுமா ? நாம போட்ட யானைக்குட்டி வயதான காலத்தில் நமக்கு தழை ஏதும் கொண்டு வந்து கொடுக்குமா (அதுகளத்தான் பிரிச்சு கோவில்ல பிச்சை எடுக்க வச்சிருவோமா அப்புறம் எப்படி தாய் பாசம் வரப்போது பாகன் பாசம் வேணும்னா வரலாம், நாமும் அத பெருமையா பேசலாம் ) என்றெல்லாம் யோசிக்குமா என தெரியவில்லை.
ஆனால் இந்த மனிதன் மட்டுமே தாய்மை புனிதம், தந்தமை தியாகமென உருவாக்கி வைத்திருக்கிறனோ.
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா? என சொல்லியிருப்பார் கண்ணதாசன். யோசித்தால் அது உண்மை. ஆனால் அதுதான் வாழ்க்கை. இங்கே சமூகம் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதனை நாகரீகம் வழி நடத்திச் செல்கிறது. இது ஒரு சங்கிலி. அதற்கு மேல் அதில் பெரிய தத்துவங்களோ போதனைகளோ கோட்பாடுகளோ இல்லை.
இயல்பாகவே சார்ந்து வாழும் தன்மை மனித இனத்திற்கு கொஞ்சம் அதிகமே உண்டு. எங்கே அது தப்பி போய்விடுமோ என பயந்து உருவாக்கியதே மத கோட்பாடு எனும் சமூக இயங்கியல் இதில் எல்லாம் உச்சம் நாகரிகம் என்ற சமூகத்தில் எல்லாமே உண்டு. ஆக நாம் உருவாக்கியது எல்லாமே நம்மை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே. இந்த சுய பாதுகாப்பு சில கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கிறது. ஆனால் என்ன வளர்த்தாலும் அந்த சுயம் சிந்திக்க தொடங்கும் போது எல்லாம் உடைப்பட்டு போகிறது.
ஏன் என்ற கேள்வி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எதற்கு என்பது அதன் தொடர்ச்சியே. இந்த கேள்விகள் வர வர அவன் ஒன்றை ஒன்றாக உடைக்கிறான். தாய்மை என்ற சங்கிலியை உடைப்பவன் மனைவி என்ற சங்கிலிக்குள் பிணைத்துக்கொள்வான். இப்படித்தான் எல்லாமே…
ஆண் பெண் சார்ந்து வாழ்தல் என்பது இயற்கை நியதி. மற்றவை எல்லாமே நாம் உருவாக்கிய மேக் அப்.
என் குழந்தைகள் என் மூலமாக வந்திருக்கிறார்கள்.எனக்காக அல்ல என்ற புரிதல் வேண்டும்.ஒரு குழந்தையின் வயது தான் ஒரு தாயாக ஒரு பெற்றோராக என் வயது என்ற புரிதல் வேண்டும்.
நான் அவர்களுக்கு முன்னால் வாழ வந்தவன்(ள்) தான். அதனாலே எல்லாம் சரியாகிவிடாது. அதே சமயம் எனக்கு கிடைப்பதைவிட வேறுசில வசதிகள் அவனுக்கு(வளுக்கு) கிடைக்கிறது. எனக்கு கிடைத்த சில அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. ஆகையால் நானும் குழந்தைகளோடு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் மட்டுமே எனக்கு அது இன்னொரு உயிர் என புரியும்.
எப்போது இன்னொரு உயிர் என புரிந்துகொண்டீர்களோ… அப்போது அவர்கள் உங்கள் எதிர்கால டெபாசிட் இல்லையென புரிந்துகொள்ள முடியும். உங்கள் முதுமையை சமாளிக்க உங்களுக்கு சுய சிந்தனை வரும். அதே சமயம் அப்படி வளரும் குழந்தைகளுக்கு நீங்களும் ஒரு உயிர் அதனை காப்பது தன் வாழ்வில் ஒரு பகுதி என புரியும்.
இதை உணராத வரை…பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதிர்கால டெபாசிட்டே. குழந்தைகளுக்கு வயதான பெற்றோர் ஒரு சுமையே...
கருத்துகள்
கருத்துரையிடுக