ஒரு படம் பார்க்க தோன்ற முக்கிய காரணமாக அமைவது அதன் பின்னால் இருக்கும் நடிகர் இயக்குனர் மட்டுமே. இன்னொர் பக்கம் படத்தின் பெயர் அதன் போஸ்டர் வடிவமைப்பு போன்ற மெனக்கெடல்களும் சேர்ந்தது தான். சுப்பிரமணியபுரம் படம் அப்படித்தான் கவனத்தை ஈர்த்தது. கைதி போஸ்டர் வடிவமைப்பு இது ஏதோ வேறுமாதிரியான படமென நம்மை கவனிக்க வைத்தது. இப்படியான சில படங்கள் உண்டு.
இன்னொன்று இயக்குனர்கள். இவங்க இப்படித்தான் எடுப்பாங்கனு நம்மள நம்ப வைக்கிறது. ராஜமெளலி, ஷங்கர் படங்கள் எல்லாம் பிரம்மாண்டம் என பதிய வைப்பார்கள். இப்படியும் சில உண்டு. இன்னும் சில இயக்குனர்கள் வேறுமாதிரியான கதை களங்கள் தேர்வு செய்வார்கள். அது நமக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு படத்திற்கும் அது மாறுபடும். பாக்யராஜ், பாரதிராஜா மணிவண்ணன் எல்லாம் இந்த வகையில் அடங்குவார்கள்.
இதில் பார்த்திபன் வேறு ஒரு தளத்தில் இயங்குகிறார். வித்தியாசமான படங்கள் கொடுத்தே ஆகவேண்டுமென மெனக்கெடுகிறார். ஆனால் அந்த மெனெக்கடல் தான் இங்கே பிரச்சினை. அது என்ன செய்கிறது ஒரு கலைஞனை கதையை கொலை செய்கிறது. ஒரு வீட்டில் இருக்கும் கடிகாரம் கூட வேறுபட்டு இருக்க வேண்டுமென மெனக்கெடும் அளவில் செல்லும் போது பார்வையாளானுக்கு ஒரு வித அயர்ச்சி தானே ஏற்படும். அவரின் கடைசி 5 படங்களை எடுத்து பாருங்கள். கலை விவகாரங்களில் அது படத்தில் இருந்து அந்நியப்பட்டு இருக்கும். அது ஒருவிதமான அந்நியத்தன்மையை திரைக்கதையில் காட்சியமைப்பில் கொடுக்கும்.
ஒரு அறையில் மட்டுமே கதை, ஒரு மனிதர் மட்டுமே நடிக்கும் கதை என உருவாக்க அமரும் போது அங்கே கதை செய்யப்படும். செய்யப்படும் கதைகளில் பெரிய ஈர்ப்பு இருக்காது. குணா படத்தில் கமல் ஒரே ஷாட்டில் ஒரு அறையில் சுற்றி சுற்றி தொடர்ந்து பேசி கீழே விழுவார். இது மாறுபட்டு செய்யவேண்டுமென செய்திருக்கமாட்டார்கள். இந்த காட்சி கேட்கிறாது அதனை அப்படி காட்சிப்படுத்தலாம் என வரும் போது அது ரசிகனை ரொம்பவே ஈர்க்கும். அதைவிடுத்து இந்த படத்தில் இப்படி செய்ய போறேன், அடுத்த படத்தில் அப்படி செய்ய போகிறேன் என்றான பின்னர் அங்கே இருப்பது வெறும் வித்தைகாட்டுதல் தான். வித்தை காட்டுதலில் எந்த கலைத்தன்மையும் ரசிக்க வைக்கும் ஈர்ப்பும் இருக்காது.
இப்போது பார்த்திபன் ஏதோ சிங்கிள்ஷாட் படமென அனைத்து இடங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார். உலகளவில் முதல் படம், அவ்ளோ செலவாச்சு இவ்ளோ செலவாச்சு என்கிறார். உண்மையில் அது ஈர்ப்பை உருவாக்கவே இல்லை. மாறாக வேற வேலை இல்லையா என தோன்றுகிறது.
கதையை உருவாக்குங்கள். அது கேட்கும் எல்லாவற்றையும் கொடுங்கள். ரசிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட்டுட்டு நான் யார் தெரியுமா என கதை உருவாக்காதீர்கள். கடந்துவிடுவார்கள் உங்களிடத்தில் இருந்து நினைவில் கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக