இங்கே எல்லாருக்குமே அன்புங்கிறது எப்போதும் பேசு பொருள் தான். அது பாலினத்துக்குள்ளேயாக இருந்தாலும் சரி, எதிர்பாலினங்களுக்கு உள்ளேயாக இருந்தாலும் சரி அன்பு என்ற வார்த்தை பயன்படுத்தியே வருவோம்.
அன்புடையார் எல்லாம் தமக்குரியர் என தமிழ் கிழவன் சொல்லியிருக்கிறான்.
எங்கே அன்பு இருக்குனு சொல்லிட்டிங்களோ அதுக்கு பின்னாடியே நம்பிக்கையும் வந்துடும். ரெண்டும் இரண்டு பக்கங்கள். ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்லை.
நான் ஏதோ ஒரு உறவில அன்பா இருக்கேன்னா அங்கே அவங்களுக்கு நம்பிக்கையாவும் இருக்கேனு அர்த்தம். எங்கே உங்க அன்பானவங்க லிஸ்ட் எடுங்க… அவங்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை கவனிங்க…. ரெண்டும் ஒன்னுபோல இருக்கும். இருந்தா அன்பில் நிறைந்து இருக்கோம்னு அர்த்தம்.
இல்ல நம்பிக்கை இருக்கிற மாதிரி தெரியல. அடிக்கடி வெரிபிகேஷன் என்கொயரி எல்லாம் நடக்குதுன்னா அங்க அன்பே இல்லைனு சொல்லுவேன். ஆனா அதுக்கு அவங்க ஒன்னு சொல்லுவாங்க… அதாவது நான் கொஞ்சம் பொசசிவ்னு. அதுனால இப்டி செய்றேன்னு. இதுக்கு தமிழ்ழ உடமையாக்குதல்னு பேரு. ஒரு பொருளை உடமையாக்க முடியும். ஒரு உயிர எப்படி முடியும் ? ஒரு உயிரின் அன்பு என்பது பட்டாம்பூச்சி மாதிரி. அது பறக்கும், உங்க அன்பும் நம்பிக்கையும் அடர்த்தியா இருந்தா மீண்டும் வந்து அமரும். இல்லாட்டி உக்காந்த தடம் கூட இல்லாம பறந்து போகும். இவ்ளோதான்.
இல்லயில்ல அன்பெல்லாம் கொட்டிகிடக்கு ஆனாலும் நம்பிக்கையில்லைனு அடிக்கடி கேள்விகள் மூலமாக அன்பை வாங்க முயற்சித்தால் அங்கே அன்பு போல ஒன்னும் அழகா நடிச்சிட்டு இருக்கும். ஏன்னா உங்களுக்குதான் நம்பிக்கையே இல்லையே…. நம்பிக்கை இல்லாட்டி அங்கே ஒன்னுமே இருக்காது.
மேலே தூக்கி எறியும் குழந்தையின் கண்களை கவனியுங்கள்… அதில் அன்பு பொங்கி வழியும்… கீழே இருக்கும் அந்த அன்பு தாங்கி பிடிக்கும்னு நம்பிக்கை அந்த பேரன்பை கொடுக்கும். என்றேனும் அந்த நம்பிக்கையை பொய்யாக்கி தவறவிட்டுவிட்டால் மீண்டும் அதே நிகழ்வில் கண்கள் முழுக்க பயம் தெரியும். அந்த பயம் உங்களை எதுவும் செய்ய விடாது.
அன்பாக இருங்கள். அதன் பொருள் அந்த உயிரின் மீது நம்பிக்கையாக இருக்கிறேன் என்பதாகவே இருக்கட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக