காந்தாரா என்ற படம் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். நானும் சில கட்டுரைகள் படித்தேன். படம் பார்க்க தயாரான போது இயக்குனரின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் யோசித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பார்த்தேன். ரொம்பவே யோசித்தேன். நான் யோசித்தது போலவே பலரும் யோசிக்க தொடங்கினார்கள். இப்போது புரிய தொடங்கி இருக்கும் அது டெக்னிகலாக, மிக நேர்த்தியாக நம் தலைக்குள் ஊற்றப்பட்ட விஷம் என்பது. நிற்க.
ஜெகன்மோகன்ரெட்டி எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு விசயம் சொன்னார்
“ ஆர்.எஸ்.எஸின் ஆப்ரேஷன் திராவிடம் திட்டம் “ தென்னகத்தை இனி சீர்குலைக்கும். அதனை எதிர்க்க எல்லாரும் ஒன்றினைய வேண்டுமென்றார். பின்னாளில் அவரும் அதில் ஒரு கண்ணியானர். சந்திரசேகரரெட்டி கிட்டதட்ட இதே கருத்தை வேறு ஒருதொனியில் சொன்னார். தென்னிந்தியாவை பலி கொடுத்து அதன் பொருளாதார அரசியல் சுதந்திரங்களை திருடி வடக்கே வாழ வைக்க முயல்கிறார்கள் என்றார்.
கூர்ந்து அரசியலை கவனியுங்கள். காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் ஓரளவு இருக்கிறது. இது போக அங்கே ஒன்று அல்லது இரண்டு மாநில கட்சிகள் இருக்கும். பிஜேபி என்பதே கிடையாது பல மாநிலங்களில். திடிரென ஊடகங்கள் ஒரு மாநில ஆட்சியை ஆஹா ஒஹோ என்கிறது. தொடர்ந்து பேசுகிறது. எலைட் பீப்பிள் அதனை தொடர்ந்து ஆமோதித்து பேசுகிறார்கள். 2ஜி ஆதர்ஷ் , ஊழலை அறவே ஒழிப்போம் கருப்பு பணம் மீட்பு என ஏதோ ஏதோ பேசுகிறார்கள். பெட்ரோல் விலை பாதியாக குறையும் என்கிறார்கள். டாலர் ரேட் குறையும் என்கிறார்கள். பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வருகிறது. சினிமா நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள். ஏற்கனவே இருந்த சில கட்சிகளை இவர்கள் வாங்கி நடத்துகிறார்கள். கூடவே இவர்கள் மூன்றாவதாய் ஒரு கட்சி தொடங்குகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட செலபிரட்டிகள் பிஜேபியை ஆதரிக்கிறார்கள். அல்லது கொண்டாடுகிறார்கள். சினிமாவில் தீடிரென பக்தி படங்கள் அல்லது பார்ப்பனிய சிந்தனைகள் அதிகம் வருகிறது. அல்லது இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் எங்களுக்கு ( ?) எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை அடிப்படையாக கொண்டவர்கள் வருகிறார்கள். கடந்த 6 மாதங்களில் டிஸ்கவரி சேனலில் அதிகம் இடம்பெற்றது ராமர் பாலம் என்ற கட்டுக்கதை. அதுவும் சேனல் இது எங்கள் பொறுப்பில்லை என்ற சொல்லிய பின்னர் வரும் பொய்கள். நேஷனல் ஜாக்ரபி சேனலில் காசியின் புனிதத்துவம் என்ற பகுதி வந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் தென் தமிழகத்தில் கடைக்கோடி ஊரில் ஒரு குலதெய்வம் ஆலயம் புதுப்பிக்கபட்டிருக்கிறது. அந்த ஆலயத்தில் இருப்பது ஒரு அருவாள் மற்றும் பூடம் மட்டுமே. ஆனால் எடுத்து கட்டியதில் விநாயகர், விஷ்னு, பெருமாள் இல்லாம் இடம்பெற்றிருக்கிறது. ஆலயத்தின் மேலே வடக்கே எல்லா ஆலயங்களிலும் பறக்கும் காவி கொடி பறக்கிறது.
திட்டமிட்டு நகர்கிறார்கள். காந்தாரா படமில்லை. ஒரு அறிவுரை. பன்றி வாகனமாக வணங்க சொல்லும் ஒரு அறிவுரை. நிலகுடிகளை வெளியேற்றி அரசிடம் ஒப்படையுங்கள் என்ற அறிவுரை. இந்தியாவில் காடுகள் பற்றியெறிந்த வரலாற்று புள்ளி விபரங்களை தேடினால் அவர்களை விரட்டிய பின்னர் தான் அது நடந்தது. கேரளாவில் பழங்குடியினரை கீழே இறக்கிய பின்னர் அங்கே காட்டு ரிசார்ட் சுற்றுலா தொழில் களை கட்டியது. தமிழ்நாட்டில் பழங்குடியினரை இறக்கிய பின்னர் வேதாந்தா அங்கே காலுன்றிவிட்டது.
அரசியல் ஊடகம் சினிமா குலதெய்வங்கள் இந்தியா குறித்த பெருமிதங்கள் எல்லாவற்றிலும் அவர்கள் இந்து சனாதனத்தை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். திப்பு சுல்தான் பெயரை தாங்கிய ஒரு புகை வண்டியின் பெயர் நீக்கப்பட்டு பிரிட்டிஷ் கம்பெனிக்கு பணிந்து வரிகட்டியவர்கள் பெயர்கள் கொண்டாடப்படுகிறது. யோசிக்கவே தெரியாத வாட்சப் வரலாற்று பக்தர்கள், மன்னர்கள் பெருமித வாயர்கள், சாதி பெருமையாளர்கள் எல்லாரும் அதனை அவர்களை அறியாமலோ அறிந்தோ கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் அறிந்த சிலரும், சொல்ல வெட்கமாக இருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன் எதிர்க்க துணிவில்லாமல் இருக்கும் நிலைக்கான காரணம் எதிரி கூட்டம் பெரிது என்பதல்ல. நாங்கள் இன்னும் ஒன்று சேரவில்லை என்பதனால்...
கருத்துகள்
கருத்துரையிடுக