ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாலை போடுறது எல்லாம் அவ்ளோ பெருசா இல்லை. அப்புறம் சினிமா மூலமா கொண்டு வந்தாங்க. ரஜினி மாலை போட்டாரு, நம்பியார் மாலை போட்டாரு, அமிதாப் மாலை போட்டாரு, படங்கள் கட்டுரைகள் என பெரும் விளம்பரத்துக்கு பின்னாடி ஐயப்பன் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் கடவுளாகிப்போனார்.
இன்று வழக்கமாய் செல்லும் சாலையில் அந்த கோவில் திடீரென கொஞ்சம் கூட்டம் அதிகமாய் தெரிந்தது. பின்னர் விபரம் புரிந்தது இன்று கார்த்திகை. மாலைபோடுவார்கள். விரதம் இருப்பார்கள். தனித்த அடையாளத்தோடு ஆடைகள் அணிந்துகொள்வார்கள். அவர்கள் வீட்டு பெண்களே அவர்களுக்கு தீட்டாவார்கள். வீட்டில் அவர்கள் தனித்துவமாய் தெரிவார்கள். வீட்டில் பெண்களுக்கு இன்னும் வேலைகள் கூடும். சாஸ்திரம் சம்பிரதாயமென கூடும். எனக்கு இப்பவும் புரியாத விடயம், மட்டன் சிக்கன் சாப்பிட்ட சத்து தான் அவர்கள் மலையேற உதவப்போகுது. அதனால் ஊறிய ரத்தம் உடம்பில் இருக்கும். இந்த ஒரு 60 நாளோ 40 நாளோ விரதம் இருந்தால் கொழுப்பு குறையும். மத்தபடியே எல்லாமே அதே தானே. அது போதுமா கடவுளுக்கும். இந்த 60 நாள் மட்டும் அவர் சீர்தூக்கி பார்த்து அனுக்கிரகம் செய்வாரா ?
யோசித்தால் ஒரு கடவுள் பெண்களை தீட்டென்கிறார். அதற்கு ஆதரமாய் அவர் ஆண்களால் பிறந்ததாக ஒரு கதை ஓடும். ஆனால் உண்மையான வரலாறு வேறு. அதனை கேரள அறிவார்ந்த மக்களிடம் கேட்டாலே சொல்லுவார்கள். அல்லது தேடிப்படித்தாலே புரியும். ஆனாலும் பெண்களை தீட்டு என்ற கோவிலுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் ஆண்கள் செல்கிறார்கள். இதே நிலை பெண்களுக்கும் உண்டு. அவர்களும் இப்படி ஆண்களை ஒதுக்கி வழிபடுவதை அவர்களும் சில கடவுளை வரவேற்கிறார்கள்.
ஆணுமல்லன் பெண்ணுமல்லன் அலியுமல்லன் என்பதெல்லாம் சும்மா போல. கடவுளும் பாலினம் பார்த்துதான் அருள்வார் போல. இதுல எல்லா கடவுளும் ஒன்னாதான் இருக்காங்க.
இப்போதும் ஜோதி தரிசனம் கூட்டம் அள்ளும். ஐயப்பனின் தரிசனம் என சொல்லுவார்கள். ஜோதிவடிவாய் காட்சியளிக்கிறார் என சொல்லுவார்கள். என் பள்ளி காலத்தில் என் வீட்டில் அந்த ஜோதி தரிசனத்திற்கு அழைத்து சென்றார்கள். ஜோதியும் தெரிந்தது. நானெல்லாம் ஒரு நல்ல இந்துவாய் சில்லரைகளை சிதறவிட்டேன்.
அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு வழக்கில் அரசும், ஆலய நிர்வாகமும் சொல்லியது. அது நாங்கள் ஏற்றும் ஜோதிதான் என. தானாகவெல்லாம் எரியவில்லை என. அடப்பாவிகளா இதையேண்டா இத்தனை வருசம் மறைச்சிங்கனு இருக்கும். ( காஷ்மீர் பனி லிங்க கதையும் இப்படித்தான் வெளியானது ) என்ன செய்ய கூட்டம் சேர்க்கனும். அதுக்கு இப்படி அப்படி கதைவிட்டா தானே நடக்கும்.
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.. இன்னைக்க்கு வியாழக்கிழமையும் கூட. இப்பவே நடிகர் அஜித் சந்தானம் எல்லாரும் சாய்பாபா புகழ் பாட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் காவடியோ இல்லை விரதமோ இல்லை ஏதோ ஒன்று பிரபலமாய் இருக்கும். அதை இப்பவே நீங்க பழகிட்டிங்கன்னா.. 30 வருசமா போறேன். 40 வருசமா போறேனு பெருமையா பேசிக்கலாம்.
ஏன்னா இங்க பக்திங்கிறது ஒன்னு அரசியல், இல்லாட்டி பெருமை தானே.
ஐயப்ப சாமியே சத்ய சாய் சரணம்...
கருத்துகள்
கருத்துரையிடுக