வழக்கமான சேட்டன்கள் மொழியில் கொஞ்சம் குடும்ப உளவியல் பேசியிருக்கும் படம். சும்மா பெண்ணோட சுதந்திரம், நீதி, சமத்துவம் மட்டுமே பேசல. நாம் வாழும் சமூகத்தோட போலி தன்மையை இந்த படம் கடைசி வரை பேசிட்டே வருது. அதுவும் நுட்பமாக.
புருசன் அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்டி ஒரு பொண்னு முடிவெடுத்தா இந்த சமூகம் என்ன நினைக்கும். அந்த குடும்பம் என்ன நினைக்கும். முக்கியமா புருசன் என்ன நினைப்பாங்கிறதுதான் படம்.
ஜெயா பிறந்ததில் இருந்தே அவளுக்கு சாய்ஸே இல்லை. எல்லாமே சான்ஸ் தான். அதை அவ தக்க வைக்கனும் அதுக்கு தானே கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு. நம் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கிற எல்லாமே சான்ஸ் தானே. அவர்களால் தேர்வு செய்ய பெரிதாக வாய்ப்பு இல்லை. நல்ல மார்க்க எடுத்தாலும் இது நம்மாளுக(?!) காலேஜ், பெரியப்பாவோட சித்தப்பா மக வயித்து கொழுந்தியா இந்த காலேஜ்ல புரொபசர் இருக்கா, வீட்டு பக்கத்தில இப்படித்தான் அமையும். விருப்பபட்ட கல்லூரியோ, படிப்போ நடுத்த குடும்பங்களில் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்றைக்கு கொஞ்சம் மாறியிருந்தாலும் எல்லாருக்குமான வாய்ப்பாக இது அமையவில்லை. படிப்பு, ஆடைகள், வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் பெண்ணின் மீதான சமூக அக்கறை எப்போது கலாச்சாரம் பண்பாடு ஆணாதிக்கம் என்ற வகையில் தான் இருக்குமே தவிர அவளுடன் உரையாடி எடுத்த முடிவாக இருக்காது.
படத்தின் முக்கியமான காட்சியாக நான் கருதுவது பெண்பார்க்கும் படலம் தொடங்கி திருமணமாகும் வரையான காட்சி. மனிதர்களின் செயற்கை சிரிப்பு, செயற்கை பாராட்டு, செயற்கை அக்கறை என வழிந்தோடும் சமூக இயல்பை படம் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. அல்லது அம்பலப்படுத்தியிருக்கிறது.
எதுவுமே தன் தேர்வாக இல்லாத போது ஏன் பொறுத்து போகவேண்டுமென்ற பெண்ணின் கோவம் தான் திருப்பி அடித்தல் என்பது. அதனை ஹீரோயின் செய்கிறார். அப்போதும் தன் தவறை உணராத அந்த சமூக பிம்ப கணவன் அவளை அடிக்க அவனும் கற்றுக்கொள்கிறான். ஆனால் எல்லாம் கிடைத்து போராடும் ஒருவனுக்கும், எதுவுமே கிடைக்காமல் போராடும் ஒருவளுக்குமான போட்டியில் யார் இறங்கி அடிப்பார்கள். அதுதான் இங்கே நிகழ்கிறது. ஆனாலும் ஆண் விட்டுவிடுவாரா ?
குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும், அவளை அடக்கிவிடலாம், எல்லாம் சரியாகிடும்னு இங்கே தான் ஒரு நியாயம் இருக்கே.. புள்ள பொறந்த பிறகு எதுக்கு அதெல்லாம் என பெண்களின் எல்லா உணர்வுகளையும் வலிகளையும் தோண்டி புதைக்கலாமே ? அதை நோக்கி நகர்கிறான் சமூக பிம்ப கணவன். அதிலும் நடிக்க வரவில்லை. மாட்டிக்கொண்டு டைவோர்சில் முடிகிறது.
ஒரு பெண் ஆணை அடிப்பது தீர்வா என்றால் ? ஏன் தீர்வாக இருக்க முடியாது என்பது தான் என் கேள்வி. வேலைப்பளூ, குடும்பபாரம், மனச்சுமை அதனால் ஆண் அடிக்கிறான் என்றால், இது எதுவுமே இல்லாத வேற்றுலகிலா பெண் வாழ்கிறாள். அவளுக்கும் அது எல்லாம் உண்டுதானே. அவளும் அடிப்பாள். இங்கே அடி தீர்வில்லை என்றால் உரையாடு. அங்கே எல்லாம் மாறும். நீ உரையாட தயார் என்றால் அவள் காதுகள் கிடைக்கும். இல்லையேல் கொடுப்பது கிடைக்கும்.
ஆனால் உரையாடவே தெரியாத ஆண்கள் அதிகம் உண்டு இங்கே .அவர்களுக்கு ஜெயா மொழியில் தான் பதில் கிடைக்க வேண்டும்.
எல்லா ஆண்களும் அப்படியா என்ற கேள்விக்கும் படத்திலே பதில் உண்டு. அவளுடைய அண்ணன். அவனுக்கும் அவளின் வலியோ தேடலோ தேவையோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பா ஆணாதிக்க திமிர் போல தங்கையை விடாமல் அவனுக்கு தெரிந்த வழியில் அவன் உரையாடுவான். அவனுக்கு சிறுவயது முதலே கொடுக்கப்பட்ட ஆண் நெடில் வாடை தாண்டி அவன் அவளுடன் பயணிப்பான். இதுவும் படத்தில் காட்சியாக வந்திருக்கும்.
ஆம். இப்போது சில ஆண்கள் மாறியிருக்கிறார்கள். அது ஏதோ அவர்களின் கொடையல்ல. அவர்களின் விட்டுக்கொடுத்தல் அல்ல. பெண்களின் கேள்வி. ஆமால்ல, அவளுக்கும் அப்படித்தானே என யோசிக்க தொடங்கி மாறி இருக்கிறார்கள்.
இந்த படம் ஒரு நாடக தன்மையில் இருந்தாலும், உளவியல் உண்மையை கொஞ்சம் நெருக்கமாக பேசுகிறது. குறிப்பாக ஆணின் குற்றவுணர்ச்சி, தோல்வியை ஏற்றுக்கொள்ளாத திமிர், இவளை அடக்க வேண்டுமென்ற போலி அன்பின் வெளிப்பாடு, எல்லாம் இழந்த வலி என இயல்பாய் ஏனைய பாத்திரங்களும் கொஞ்சமும் தடம் மாறாது பயணிக்கிறது.
எனக்கு சப்பாத்தி வேண்டும், இடியாப்பம் வேண்டும், சிக்கன் வேண்டுமென உக்காந்த இடத்தில் ஆர்டர் இடுவதில் தவறில்லை. இதன் உழைப்பில் என் பங்கு என்ன என்பதில் இருக்கிறது என் மனைவியின், என் அம்மாவின், என் சகோதரியின் மீதான அன்பும் மரியாதையும். நீங்கள் அலுவலகத்தில் வேலை என்றால் மனைவிக்கு அலுவலகம் + வீடு, அல்லது வீட்டில் வேலை. உங்களுக்கு சம்பளம் உண்டு. மனைவியின் வீட்டு வேலைக்கு சம்பளம் என்பது பகிர்தல் தான்.
வேலையை பகிர்தல், பொறுப்பை பகிர்தல், இப்படி பகிர்ந்துகொள்ளுதல் தான். நீங்க கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் விரைவில் உங்களுக்கு சுமையே இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.
படம் பார்க்க வேண்டிய படம். வெறும் திருப்பி அடிக்கிறானு மட்டும் பார்க்காதிங்க.. இன்னும் பல நுட்பங்கள் இருக்கிறது. அம்மாவின் இடியாப்ப வலி, சகோதரியின் குண்டச்சி வலி, அம்மா அப்பாவின் போலியான வார்த்தை சுதந்திரம், மாமா என்ற உறவின் பொய்யான அறிவுரைகள் என படம் நிறைய பேசியிருக்கிறது. படத்தில் ஒரு வசனம் வரும்..
படம் பார்க்க வேண்டிய படம். வெறும் திருப்பி அடிக்கிறானு மட்டும் பார்க்காதிங்க.. இன்னும் பல நுட்பங்கள் இருக்கிறது. அம்மாவின் இடியாப்ப வலி, சகோதரியின் குண்டச்சி வலி, அம்மா அப்பாவின் போலியான வார்த்தை சுதந்திரம், மாமா என்ற உறவின் பொய்யான அறிவுரைகள் என படம் நிறைய பேசியிருக்கிறது. படத்தில் ஒரு வசனம் வரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக