நம்ம எல்லாருக்கும் “டாடிஸ் பிரின்சி(Dad's little princess)” பத்தி தெரியும். அதே பிரின்சி திருமணத்திற்கு பிறகு அம்மாவின் பின்னாலே அலையும் உளவியலும் நமக்கு புரியும். ஆனாலும் அவர் எப்போதும் டாடியின் பிரின்சியாகவே தொடர்வார் தன் காலம் முழுவதும். அதை அவளோட கணவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது. இது நமக்கு தெரிந்த உறவு. நமக்கு தெரியாத இன்னொரு உறவு இருக்கிறது. அது #மம்மிஸ்_எம்பரர். தன் மகனை ராஜாவாக வளர்க்கும் மம்மி(அம்மா)களின் உளவியல் அது. இன்னும் சொல்லப்போனால் அது டாடிஸ் பிரின்சியை விட ரொம்ப நுட்பமானது. தனித்துவமனாது. சூட்சமமானது.
வெளியில் இருந்து பார்க்கும் டாடி - பிரின்சி போல இது தெரியாது.
அதில் அப்பா சொன்னால் மகள் கேட்பாள்.
மகள் பேச்சுக்கு அப்பா மறுக்கமாட்டார். அப்பாவின் பார்வை பார்த்து மகள் தனக்கு பிடிக்குமென்றாலும் செய்யாமல் தவிர்த்துவிடுவார். ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தன் அன்பின் சிணுங்களில் சாதித்துக்கொள்வார்.
அப்பா மறுக்கும் விடயத்தில் மகள் கொஞ்சம் அடம் பிடித்து சிணுங்கினால் அப்பா உன் இஷ்டம் என விலகிகொள்வார்.இப்படித்தான் இந்த உறவு இருக்கும்.
ஆனால் இந்த மம்மி - எம்பரர் வகையறாக்கள் வெளியில் ஏதும் தெரியாது. அம்மா என்ன சொன்னாலும் கேட்காமல் ஆடுவார் எம்பரர்.
முடிய ஒட்ட வெட்டுடா.. னு அம்மா சொன்னா போம்மா இதாம்மா இப்ப பேஷன்,
இந்த கலர்ல டிரெஸ் எடுடா.. போம்ம அது பழைய டிசைன்..
டேய் தலைக்கு எண்ணெய் வைடா... போம்மா... இப்படி எல்லாமே எதிரும் புதிருமாய் இருக்கும். அதை தாண்டியும் அங்கே ஒரு மம்மி தன்னை காக்க, எதிர்காலத்திற்காக ஒரு எம்பரரை உருவாக்கி வைத்திருப்பார் உளவியல் ரீதியாக.
அவருக்கு பிடித்த ஒரு விசயத்தை அதை சொன்னால் இவன் கேட்கமாட்டான் என தெரிந்து கொண்டு சொல்லும் போது உங்கப்பா சொல்ல சொன்னாரு சொன்னேன் என நாசுக்காய் அதை சொல்லுவார்.அதாவது எனக்கு இதில் ஒன்னுமில்லை. உங்கப்பா சொன்னாரு. செய். இல்லாட்டி தேவையில்லாம சண்டைவரும் என்பது ஒரு சிக்னல். இதே அம்மா சில நேரம் அவனை ஏன் இப்படி பண்ரிங்க விடுங்க என்று அவன் முன்னாலே சொல்லி அவனை தன் பக்கம் இழுத்து வைப்பார். அதாவது அப்பாக்கு எதிராக மகனுக்கு ஆதரவாக இந்த வார்த்தைகள். இன்னும் சில நேரம் அவரு கிடக்காருடா என சீண்டியும் விடுவார். அப்பாவுக்கு தெரியாமல் இந்த மம்மி கொடுக்கும் செல்லம் ஒரு பேரரசரை அல்ல ஒரு சிப்பாயை ( படைவீரன் ) உருவாக்கி வைத்திருக்கும். இதில் ஆச்சர்யமான விசயம் இது அந்த பேரரசருக்கு தெரியவே தெரியாது. அவன் எங்கம்மா என்ன ஒரு ராஜா மாதி பார்த்துகிட்டாங்கனு நம்பிட்டு இருப்பான். ஒரு கட்டத்தில் அப்பா அம்மாவுக்கு எதிராக பேசும் போது பொங்கி எழுந்து பேச வைக்கும் எம்பரரை. அம்மாவுக்கு சார்பாக பேச வைக்கும். சண்டை போட வைக்கும். இதே சூழலில் டாடியின் பிரின்சி டாடியை சமாதனம் செய்யும் விடுங்க டாடி என சமாதனம் செய்யும்.ஒரு போதும் அம்மாவை பகைத்துக்கொள்ளாது. ஆனால் எம்பரர் தன் அம்மாவுக்காக சண்டையே செய்யும் அப்பாவிடம். இது தான் பிரின்சிக்கும் எம்பரர்க்கு உள்ள வேறுப்பாடு.
இன்னொரு முக்கிய விசயம் இந்த டாடி பிரின்சி இருக்கே அப்புறம் ஒருத்தனுக்கு இளவரசியா போகும். அதாவது இன்னொரு மம்மீஸ் எம்பரருக்கு. அப்பா இந்த டாடி ஒதுங்கிப்பாரு. என்னம்மா நல்லாயிருக்கியா…னு தள்ளி நிப்பாரு. இந்த பிரின்சி டாடிகிட்ட ஏதாச்சும் கேட்டா, அவருட்ட ( பிரின்சியோட இளவரசர்கிட்ட) சொல்லிட்டியா என அப்பாவியா தள்ளி நின்னுக்கும். இதனை பிரின்சி புரிந்துகொண்டு சரி இனி, இந்த இளவரசர் தான் நமக்கு என வாழ்ந்து கொள்வார். இதில் இன்னொரு நுட்பமான விசயத்திற்கு வருகிறேன். டாடியின் பிரின்சி திருமணத்திற்கு பிறகு கணவனை கொஞ்சம் ஏற்றுக்கொள்வார். இல்லை தன்னை மாற்றிக் கொள்வார். அல்லது சமாளித்துக்கொள்வார்.
ஆனால் இந்த எம்பரர் இருக்கிறார்களே... அவர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. டாடி தன் பிரின்சியை விட்டுகொடுத்தது போல மம்மி தன் எம்பரரை விட்டுக்கொடுக்காது. வந்து பாருனு நிக்கும். ரெண்டுக்கும் இடையில் சிக்கி எம்பரர்கள் முழிப்பார்கள். இன்னொருவர் பிரின்சியை எப்படி தன் வீட்டில் ராஜகுமாரியக்குவது.. அல்லது தான் ஏற்கனவே சிப்பாயாக பணிபுரியும் இடத்தில் இவளை எப்படி இன்னொரு சிப்பாய் ஆக்குவது என்றே திணறிப்போவான். அப்பதான் சிலருக்கு தெரியும் நாம எம்பரர் இல்லை சிப்பாய். இப்ப நம்மளா நம்பி ஒரு இளவரசி வந்திருக்கா ? அல்ரெடி இங்கே ஒரு ராஜமாதா இருக்கா ? என்ன செய்யலாம்னு யோசிச்சு காலத்தை தள்ளுவான். ஒரு கட்டத்தில் அவனுக்கு தன்னை வளர்த்த அப்பா என்ற முன்னாள் சிப்பாய் நினைவுக்கு வருவான். தெய்வம்யா நீ ... என அம்மாவின் உளவியல் தாக்குதல் புரிந்துகொள்வான் அந்த எம்பரர்.
ஆனால் அவனே விரும்பினாலும் அந்த உளவியல் அவனை விடாது. அது கொஞ்சம் விட்டாலும் பெரும்பாலும் சிப்பாயாகவே இருக்க விரும்புகிறான். நீ கொஞ்சம் அனுசரிச்சு போயேன் என்பான், அல்லது இதெல்லாம் கிச்சனோட வச்சிக்கோ என்பான், அல்லது நா கேட்கிறேன் என தப்பிப்பான். அவனுக்கு தெரியும்.. இது ராஜகுமாரி, நான் சிப்பாய் என. சிப்பாய் என்ன செய்ய முடியும். அதுவும் அம்மா என்ற பெரும் அதிகாரம் முன்பு. அம்மாக்களின் கண்ணீருக்கு இந்த சிப்பாய்கள் உயிரையே விடுவார்கள். இதில் சிலரே தெரிந்து தெளிந்து கரையேறுகிறார்கள். ரொம்ப பேர் தொலைத்து விடுகிறார்கள்.
அழுத்தமாய் சொல்கிறேன் இங்கே பலபேர் சிப்பாய் தான். அதுவும் அம்மாவால் வார்க்கப்பட்ட “ உனக்கென்னடா நீ ராஜாடா “ என சொல்லப்பட்ட சிப்பாய் தான். நாமெல்லாம் இந்த டாடியின் பிரின்சியை கிண்டலடிக்கும் போது இந்த மம்மிகள் சிரித்து கொள்வார்கள். காரணம் அந்த மம்மி ஒரு டாடியின் பிரின்சியாக இருந்து, இளவரசியாக வந்து இன்று ஒரு சிப்பாயை உருவாக்கி இருக்கிறோம். சிப்பாய்களால் இளரசியை காக்க மட்டுமே முடியும். ஆனால் இளவரசிகளால் இன்னொரு சிப்பாயை உருவாக்க முடியும். நீங்கள் சிப்பாயா இல்லை பிரின்சியா என்பதெல்லாம் பிரச்சினையில்லை.. எங்கே சிப்பாய் எங்கே பிரின்சி என புரிந்தால் ... சிரித்தபடியே ஒரு ராஜ்ஜியத்தை ஆளவும் முடியும், சிரித்தபடியே இன்னொரு தேசத்திற்கு அன்பான அடிமையாக கப்பம் கட்டவும் முடியும்.
டாடிஸ் பிரின்சியால் குறைந்த பட்சம் எங்கப்பா யாரு தெரியுமானு கண்ணீரோடு கேட்க முடியும். ஆனால் மம்மீஸ் எம்பரர்க்கு அது கூட சொல்ல முடியாது. ஏனெனில் அவனின் எதிரில் இருப்பது ஒரு இளவரசி. மேல் இருப்பது ராஜகுமாரி. இந்த இளவரசி கையில் இன்னொரு பிரின்சியோ அல்லது வருங்கால எம்பரரோ இருக்கும் குழந்தையாக. அவன் அப்படியே பம்மிக்கொள்வான். அது ஒன்றுதான் அவனுக்கு இருக்கும் ஆகப்பெரிய தந்திரமும் வாழ்க்கை தத்துவம்.
27/11/2022 நீயா.. நானாவின் தாக்கத்தால் எழுத விழைந்தது...
கருத்துகள்
கருத்துரையிடுக