கமல் ஒரு படத்தில சொல்லுவாரு மன்னிப்பு கேட்கிறவன் மனுசன். மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்னு சொல்லுவாரு.
இங்க தப்பு செய்யாதவனும் இல்லை. மன்னிப்பு கேட்காதவனும் இல்லை. ஆனா மன்னிப்பு கொடுக்கிறவன் இருக்கானானு பார்த்தா ரொம்ப கம்மிங்க. ஏன்னா நம்ம உளவியல் அப்படி.
இப்ப ஒரு உறவில X ம் Yம் நெருங்கி இருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த X ஏதோ தப்பு செஞ்சுட்டாரு. Yக்கு அதுனால மனசு பாதிப்பு. பொருளாதார பாதிப்பு. இப்படி ஏதோ ஒரு பாதிப்பு. அது பெருசு சிறுசு எல்லாம் அவருக்கு தான் தெரியும்.
காலமாற்றத்தில் X தன் தவறை உணர்ந்து Yகிட்ட மன்னிப்பு கேட்பாரு. இப்ப Yக்கு சிக்கல். அந்த சூழல் நிலைமை பாதிப்பு எல்லாமே கண் முன்ன வந்து போகும். ஏன்னா அவர் அதை எதிர்கொண்டாவர் Y தானே. இப்ப மன்னிப்பு கொடுக்கலனா இன்னும் ஏதாச்சும் பெருசா வருமோ, இல்லாட்டி ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லுமோனு பயந்து Xஅ மன்னிப்பாரு.
இந்த Xக்கும் ஒரு சந்தோஷம். நிம்மதி எல்லாமே கிடைக்கும். மன்னிப்பு கேட்ட மறுநாளே Y கிட்ட பழைய படி உறவை அன்பை புதுப்பிக்க முயலும். ஆனால் Y ஒரு நாடக தன்மையிலே இருக்கும். ஏன்னா உளவியல் பயம் அப்படி.
சரி இப்ப என்ன செய்றது.
Y ட்ட என்ன சொல்றதுன்னா , மன்னிச்சே ஆகணும். ஏன்னா வெறுப்புலையோ, இல்லை ஒதுக்கி வைக்கிறதிலையே வாழ்க்கை முடியாது . காலம் பூரா அந்த வேதனையை தூக்கி சுமக்க முடியாது. அதுனால முழுசா மன்னிங்க. அவங்க மறுபடியும் பேசும் போது முழுசா பேசுங்க.
Xட்ட சொல்றது என்னானா.. கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன்னா நீங்க செஞ்ச செயல்ல அல்லது வார்த்தையில உங்க முன்னால் நட்பு அல்லது உறவு எதையோ இழந்திருக்கு. அது ஆற டைம் வேணும். அவங்க அவங்களையே மீட்டெடுக்க டைம் வேண்டும். அதைவிட முக்கியம் உங்கள்ட்ட பழைய மாதிரி பேச நீங்க இன்னும் கொஞ்சம் மெனக்கெடனும். இந்த பொறுமை இருந்தா மட்டுமே மன்னிப்பு கேட்ட உறவுகிட்ட பேச தயாரா இருங்க. இல்லாட்டி மன்னிப்பு கொடுத்த அடுத்த நிமிசம் உங்க வாழ்க்கைய பார்த்துட்டு போய்டுங்க. ஏன்னா நாந்தான் மன்னிப்பு கேட்டேன்ல அப்புறம் ஏன் இன்னும் அதையே நினைக்கிறேனு கேட்டா .. மனசு அப்படித்தாங்க. ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு செயல் பழசு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டும். ஏன்னா மனசே ஒரு குரங்கு. அதுகிட்ட போய் குரங்க நினைக்காதானு சொன்னா வாழ்க்கையோட சோலி முடிஞ்ச்.
நீங்க மன்னிப்பு கொடுக்கலாம். கேட்கலாம். எதுவா இருந்தாலும் அது நம்ம நிம்மதிக்கு தான். அய்யோ இத செஞ்சுட்டோமோனு குற்றவுணர்ச்சியோட வாழ்றத விட இது கொஞ்சம் சுலபம். அந்த பக்கம் அவனை/ அவளை நினைச்சாலே எரிச்சல் வருதேங்கிற நிலையில இருந்து அதான் மன்னிப்பு கேட்டாங்கள்ள விட்டு தள்ளுனு நமக்கு ஒரு வலி நீக்க மருந்து கிடைக்கும்.
அவ்ளோதான். வெகு சொற்பமாகவே மன்னிப்பு கேட்ட உறவில் அடுத்த நொடியோ பூ பூக்கும். மற்ற எல்லாமே கொஞ்சம் காலம் எடுக்கும். அதற்கு சூழல் அமைப்பு வார்த்தை காலம்னு எல்லாமே முக்கியம்.
நம்பிக்கைங்கிறது பூ மாதிரி. அத கசக்கிட்ட அவ்ளோதான். மறுபடியும் ஒன்னும் செய்ய முடியாது. எட்ட நின்னு நீ நல்லாருக்கியா ? நா நல்ல இருக்கேன். அது எப்டி இருக்கு. இது எப்டி இருக்குனு பொதுவான உரையாடலோடு மட்டுமே இருங்கள். காலமும் சூழலும் அமைந்தால் முன்னைவிட அன்பாகலாம். அப்படியான உறவுகளும் நட்புக்களும் இங்கே ஏராளம்.
மன்னிப்பு கேட்கிறவன் மனுசன்
மன்னிப்பு கொடுக்கிறவன் பெரிய மனுசன்.
கருத்துகள்
கருத்துரையிடுக