ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள்.
இன்னொரு பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது.
என் கம்யூனிஸ்டு தோழர் ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்புக்கு, தொகை கொடுத்துவிட்டால் வீட்டில் வரும் கேள்வி, என்னடி சம்பாதிக்கிற திமிரா ? வீட்ல கேட்கணும்னு தோணல. இதே ஆண் செய்துவிட்டு வந்து சொன்னால் அது பெருமை. சமூக கடமை. ஒரு நல்லது செய்வதற்கு கூட அவளிடம் பணம் இருந்தாலும் அதில் ஏகப்பட்ட தடைகள் உண்டு.
என்னங்க இன்னைக்கு பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன் ? ஏதோ மூணு நாளா மாரு வலினு சொல்லிட்டு இருக்கா ? போய்டு வரட்டா ? என்ற கேள்விக்கு பதில் “ பார்க்கலாம்”. என்பதாக இருக்கும். இத்தனைக்கும் அடுத்த 9 கிலோமீட்டரில் தான் ஊர் இருக்கும்.
இந்த சமூக சூழ்நிலையில் குடும்பதலைவிக்கு மகளிர் உரிமைத் தொகை என்பதை கண்டிப்பாக வரவேற்பேன். காரணம் அது சமூக பொருளாதார சுழற்சி. பெண்களின் வாழ்வாதார அடிப்படை நம்பிக்கை கொடுக்கும் விடயம். மாதம் தோறும் அந்த ஆயிரத்தில் அவர் செஷல்ஸ் தீவில் இடம் வாங்க போவதில்லை. ஆனால் அதனை தன் குடும்பத்துக்கு செலவழிப்பார். என்ன செலவழிப்பார் ? தின்பண்டங்களாக இருக்கலாம் ? சீட் கட்டலாம் ? பேருகால மகளுக்கு மருமகளுக்கு நல்ல உணவுக்காய் இருக்கலாம்.. ? நல்ல துணிமணிக்காய் இருக்கலாம்... ? எல்லாமே இங்கே சமூகத்தில் தான் உழல போகிறது அந்த பணம்.
இல்லையில்லை அந்த ₹1000த்தில் வேலை வாய்ப்பு, தொழில் என்றெல்லாம் சொல்பவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தயவு செய்து பக்கத்து வீடு வாட்சப் புரட்சி வசனம் மட்டுமே உலகென இருக்காதீர்கள். சமூகத்தை கண் திறந்து பாருங்கள் என்பேன். இந்த சமூக சாதீய பெண்ணடிமை சிக்கல் தீர இதெல்லாம் வழி முறைகள் என்பேன். நான் வரவேற்கிறேன். அவர்களுக்கு மிக்சி கொடுத்தது கிரைண்டர் கொடுத்தது, கல்விக்கு பணம் கொடுத்தது என எல்லாவற்றையும் வரவேற்கிறேன்.
ஏனெனில் ரஞ்சித் ஒரு வசனம் சொல்லுவார் “ எங்களுக்கு ஓட்டு இருக்குனு தானே உசுரோடு வச்சிருக்கிங்க இல்லாட்டி கடல் தாண்டி போட்ற மாட்டிங்க" என்பார். அதே தான் பெண்களுக்கும்.
ஏதோ அரசு தாலிக்கு தங்கம், அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரில சேர்ந்து படிச்ச மாதம் ₹1000, பேறு கால உதவி என செய்வதால் மட்டுமே அமைதியாக இருக்கிறார்கள். இல்லையேல் இப்பவும் சமூகத்திற்கு கள்ளிப்பால் கொடுக்க தெரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக