நகைச்சுவை நடிகர்கள் திடிரென கொஞ்சம் எமோஷனலாக பேசும் போது கவனிக்கப்படும். வெளிப்பாடுகள் கொஞ்சம் சரியாக அமைந்துவிட்டால் அது கொண்டாடப்படும்.
எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எல்லாமே அப்படி கொண்டாடப்பட்டவையே. நாகேஷ்க்கு பிறகு நகைச்சுவை கூடவே கொஞ்சம் எமோஷனல் ஆக்டிங் என எவருக்கும் சரியாக வாய்க்கவில்லை என்றே கருதுவேன்.
கவுண்டமணிக்கு என சில படங்கள் இருந்தாலும் அதிலும் கொஞ்சம் செயற்கை தெரிந்தது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் கவுண்டர் நன்றாக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் ஈர்ப்பை கொண்டுவரவில்லை என்றே சொல்லுவேன்.
நடிகைகளில் மனோராமவிற்கு பிறகு யாருமே அங்கே வரவில்லை. அவர் முடிசூடா ராணியாகவே இருந்தார். நகைச்சுவை + எமோஷனல் என கடைசி வரை நடித்தார்.
நாகேஷ்க்கு பிறகு என்றால் எனக்கு வடிவேலு நியாபகம் வருகிறார். தேவர்மகனில் ஒரு காட்சியில் கலங்கடித்தவர் அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை பக்கமே பயணித்தார். ”பொற்காலம்” படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென டிராக் மாதிரி 4 நிமிட காட்சியில் படத்தையே தன் பக்கம் திருப்பிவிடுவார்.
நிமிடத்துக்கு முகபாவனையும் அதற்கேற்ற உணர்ச்சியும் மாற்ற தெரிந்த நடிகர் அவர். இங்கே திரையுலகில் ஒட்டப்படும் லேபிள்களை எளிதாக எல்லாம் யாரும் மாற்றிவிட முடியாது என்பதில் அவரும் சிக்கிகொண்டார். இன்றும் அவரின் காமெடிகள் கொண்டாடப்படுவது அவரது உடல்மொழி, மற்றும் மொழி உச்சரிப்பினால் தான்.
எம்டன் மகன் படத்தில் அவரின் நடிப்பு படத்தையே நமக்கு புரிய வைக்கும். இத்தனைக்கும் இரண்டு மூன்று காட்சிகள் தான் அவருக்கு நடிக்க இருக்கும். மீதியெல்லாம் வழக்கம் போல காமெடிகள் தான். ஆனால் ஒட்டுமொத்த கதையும் திசைதிருப்பும் காட்சிகள் அவைதான்.
சூரிக்கு விடுதலை ஒகே தான் என்றாலும் அதில் அவர் நகைச்சுவை நடிகராக இல்லை என்றளவில் ஒகே. ஆனால் நடித்திருக்கிறார், ஈர்த்திருக்கிராரா என்றால் இன்னும் ஒரு படம் வரட்டும் என்றே சொல்லுவேன்.
இப்போது மாமன்னன் படத்தில் போஸ்டர் பார்க்கும் போது வடிவேலுவின் அந்த நடிப்பு முகத்திற்கு தீனி கிடைக்கலாமென தெரிகிறது. பார்ப்போம் மாரி செல்வராஜ் சரியாக பயன்படுத்தி இருக்கிறாரா என...
கருத்துகள்
கருத்துரையிடுக