கோழியா முட்டையாங்கிற மாதிரி பாடலா இசையானு உருண்டுகிட்டு இருக்காங்க..!
உண்மையிலே வைரமுத்து அந்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார். சில நேரங்களில் இசை, சில நேரங்களில் பாடல் என சொல்லியிருக்கிறார். அது உண்மையும் கூட. ஆனால் சொல்லியவர் வைரமுத்து என்பதால் பலருக்கு ஒவ்வாமை. அவரவர் கலருக்கு ஏற்றார் போல சிலர் ராஜாவை இழுக்க சிலர் வைரமுத்துவை இழுக்க இது போக கங்கை அமரன் ஏற்றிவிட்ட ஏணி பற்றியெல்லாம் பேசுகிறார். ( அத யார் சொல்றா பாத்திங்களா ? )
செய்யுள் : கவிதை : பாடல் :
செய்யுள் என்பது இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் ஒரு பாடல் எனலாம். செய்யுளில் அலங்கார சொல்லைவிட கருத்தே முக்கியம் என இருக்கும். நிறைய இருந்தாலும் எல்லாருக்கும் புரிந்த ஒரு செய்யுளை சொல்கிறேன்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
இதில் இசைத்தன்மை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இசைத்தன்மை என சொல்கிறேன். இசையென சொல்லவில்லை. இசைத்தன்மை என்பது வாசிக்கும் முறையே ஒரு தாளக்கட்டுக்குள் இருக்கும். ”முத்தைதரு பத்திதிருநகை “ போல அமையும் இவையெல்லாம் செய்யுள் எனலாம். ஒரு செய்யுளை பாடலாக்க முடியுமா என்றால் அதன் சந்ததோடு மட்டுமே முடியும். இங்கே செய்யுள் எழுதியவரே இசைக்கு சொந்தக்காரர்.
அடுத்து கவிதை. இதில் கொஞ்சம் அதிகம் மெளனங்கள் இருக்கும்.
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!
இதுவும் செய்யுள் போலத்தான். ஆனால் கொஞ்சம் இசைத்தன்மை குறைவாக, மெளனம் அதிகமாய் இருக்கும். ஒரு சிறந்த கவிதையை வாசிக்கும் போது நாம் நமக்குள்ளும் ஒரு மெளனத்தை உணரமுடியும். ஒரு கவிதை பாடலாக முடியும். ஆனால் வார்த்தைகளை இசைக்குள் அடக்க அதன் உச்சரிப்பு அல்லது வார்த்தைகளை மாற்றி அந்த கவிதை கொஞ்சம் சிதையும்.
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
இது கவிதை. இது பாடலாகும் போது கொஞ்சம் வார்த்தைகள் மாறியது. அது கவிதை தன்மையை கொஞ்சம் சிதைக்கிறது என்பதை உணரலாம்.
எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா
இசை மொழியை அதன் உச்சரிப்பை இப்படி கேட்கிறது. அதனால் வரிகளை நீட்டி சுருக்கி அதனுள் பொறுத்தினார்கள். இங்கேயும் எழுத்தாளர் கொஞ்சம் இசைக்கு தன்னை தன்னுடைய வார்த்தைகளை கவிதை சொல்ல வரும் மொழியை விட்டுக்கொடுக்கிறார்.
பாடல் : இது வேறு களம். இது தான் காட்சி. இதுதான் காட்சியில் இருக்கும் மாந்தர்கள் நிலை. இதற்கு தான் பாட்டு என்றதுமே அங்கே கவிஞர் இல்லை. வார்த்தைகளை கோர்ப்பவர் வந்துவிடுகிறார்.
செய்யுள் எழுதுபவருக்கு வானமே எல்லை. நா சொல்ல வந்தது இதுதான் என நிற்பார்.
கவிஞருக்கும் அதுதான் நிலை. ஆனால் அது பாடலாகும் போது வேறு ஒரு வார்த்தையை கோர்ப்பார்.
பாடலாசிரியருக்கு மேற் சொன்ன இரண்டுமே இல்லை. அவர் அந்த காட்சி மீட்சி எல்லாம் கேட்டு ஒன்றை உருவாக்க முயல்கிறார். வெகு சிலரே அப்படி எழுதும் போது அது இசைத்தன்மையோட அமைந்து போகிறது. மற்ற எல்லாருமே கொடுக்கப்பட்ட டியூனுக்கு பாடல் எழுதுபவர்கள் தான். இங்கே இசை முதல் தன்மை பெறுகிறது. வரி இரண்டாம் தன்மை பெறுகிறது. வரியை இசை தாங்கி பிடிக்கிறது. அது விட்டுவிட்டால் அங்கே பாடல் நிக்காது. ஏனெனில் அது இசைக்கு உருவாக்கி பாடல்.
”குட்டிச்சுவத்தை எட்டிப்பார்த்தா உசுர கொடுக்க நூறு பேரு”. இந்த வசனத்தை இசை தான் பாடாலாக்குகிறது. ஆக இங்கே இசை முக்கியம். இசையை எடுத்துவிட்டார் அது வெறும் ஒரு வசனம்.
அலைவார் அவர் எல்லாம் தொலைவார்…
இந்த வசனம் தவறு
அலைவார் அவர் தானே அடைவார், இதில் வரி முக்கியம்.
இதுதான் பொதுவான வரையறை. இளையராஜாவே எம் எஸ் வி யோ ரகுமானோ அவர்களுக்கு இயக்குனரால் கொடுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று ஒரு இசையை உருவாக்குகிறார்கள். பாடலாசிரியரோ, கவிஞரோ இயக்குனர் உருவாக்கிய கதை மாந்தர் படி வரிகளை உருவாக்குகிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரு கட்டுக்குள் வைப்பது இயக்குனர் தான்.
இளையாராஜா சொல்லிய ஒரு டியூனை மறுதலித்து இது வேண்டாம் இன்னொன்னு என கேட்டு வாங்கிய பாடல்கள் அதிகம் இருக்கும். எனில் அங்கே இசையை உருவாக்கியவர் இளையாராஜா உருவாக்க வழி வகை செய்தவர் இயக்குனர் தானே. அவரும் இந்த இசை பாடல் லிஸ்டில் உண்டு.
சினிமா என்பதே கூட்டு முயற்சி. ஒருவர் ஒரு காட்சியை சொல்ல, இன்னொருவர் இந்த காட்சிக்கு இந்த டியூன் என உருவாக்க இன்னொருவர் இந்த வரிகள் என உருவாக்க… இப்டிதான் பாடல்கள் வருகிறது.
”தாந்தான் “ என்ற இறுமாப்பு வந்துவிட்டால் இப்படித்தான். இசை தான் முக்கியம். பாடல் தான் முக்கியம். உருட்டிகிட்டு இருப்பாங்க.
அதே டியூனுக்கு இன்னொரு பாடலும் எழுத முடியும்
அதே பாடலுக்கு இன்னொரு விதமாகவும் இசைக்க முடியும்.
எனில் எது முக்கியம் ? ஒரு ரசிகனுக்கு பாட்டு நல்லாருக்குனு சொன்னா அது இசைக்கும் சேர்த்துதான். ரெண்டுமே கன கச்சிதமா இருக்குனு அர்த்தம். அப்டி இல்லனா ரெண்டுமே அப்டி இல்லைனு அர்த்தம். அவ்ளோதான்.
ஒரு நல்ல இசை உங்களை ஆற்றுப்படுத்தும்
நல்ல இசையோடு கூடிய பாடல் நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தும்.
இது புரிஞ்சுகிட்டா போதும். ஆனா யாரையாச்சும் கொண்டாட யாரையாச்சும் சிறுமை செய்யனும்னு விதியா இருக்கிற காலகட்டத்தில கொஞ்சம் அசந்தா நம்மளா ஒரு குரூப் கூட சேர்த்துடுவாங்க.. உஷார்..!
கருத்துகள்
கருத்துரையிடுக