விடுதலை - பாகம் இரண்டு : தமிழ்சினிமா பார்க்காத ரசிக்காத ஒரு கதைக்களம். நக்சலைட் பக்கம் இருந்து கம்யூனிசம் பேசி இருக்கிறது.
இல்லையே அந்த படம் இருக்கிறதே இந்த படம் இருக்கிறதே என்பவர்களுக்கெல்லாம் அந்த படம் தான் பாதிக்கப்பட்டதால் தனக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டதால் ஹீரோ அரசுக்கு எதிராக மாறுவார். அதுவும் கம்யூனிச பார்வையில் இல்லாமல் ஹீரோயிச பார்வையில். ஆனால் இந்த படத்தில் பெருமாள் வாத்தியார் கருப்பனாக மாற காரணம் அவர் கண் முன் நிகழும் சாதீய வர்க்கப்போர்கள்.அதுதான் படத்தின் பலம். அதுதான் படத்தின் பலவீனம். படம் நெடுக பெருமாள் வாத்தியார் போராடுகிறார் கொல்கிறார் அது யாருக்கு என்பதில் போதிய அழுத்தம் இல்லாமல் கடந்து செல்கிறது.
தமிழகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கோர்த்து ஒரு மாலையாக்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமா நூற்றாண்டில் பல படங்கள் கம்யூனிசம் பேசி இருந்தாலும் தத்துவார்த்த ரீதியில் உரையாடி முதல் படம் விடுதலை தான்.
பெருமாள் வார்த்தியார் என்ற கருப்பன் இடது சாரி கொள்கைவாதியாக இருந்து அழித்தொழிப்பு இயக்கத்தை தொடங்கி பின்னர் அது சரியான தீர்வல்ல என மீண்டும் எழுத்து பேச்சு பக்கம் திரும்பிய நிலையில் அவரை அரசு தேடத்தொடங்குகிறது. தேடலில் அரசு தன் முழு பயங்கரவாத முகத்தை காட்ட அதனால் என்னென்ன விளைகிறது என்பதையும். பெருமாள் வாத்தியார் பயணம் என்ன என்பதையும் அழகாக பேசி இருக்கிறார்கள்.
படம் பல்வேறு சேனல்களில் விரிகிறது, ஒன்று சூரி சொல்லும் பார்வையில் கதை, அந்த கதையினுள் விஜய்சேதுபதி சொல்லும் பார்வை, இந்த இரண்டுக்கும் இடையே நிகழ்காலத்தின் அதிகார வர்க்கம் நடத்தும் அதிகார பேர சண்டைகள் என பல சேனல்களில் கதை சொல்கிறார்கள். அது கொஞ்சம் பெரிய பின்னடைவை கொடுக்கிறது. கால வரிசை கிரமத்தில் படம் நகராமல் முன் பின் என கதையின் சுவாரசியத்துக்கு கதை நகர்வதும் ரசிகனை கொஞ்சம் சோதிக்கிறது.
படமாக ஆகச்சிறந்த படமென்பேன். ஆனால் வெகுஜன படமா என்றால் கண்டிப்பாக இல்லை. வர்க்கபேதம் குறித்து பேராண்மை படத்தில் ஈ படத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஜனநாதன் படத்தில் பேசியிருக்கிறார். அதன் நீட்சியான அடர்த்தி தான் விடுதலை படம்.
படத்தின் முதல் கவனம் பெறுபவர் வெற்றிமாறன். இவ்வளவு பெரிய களத்தை தேர்ந்தெடுத்தவர் முதல் பாகத்தில் கோட்டைவிட்டுவிட்டார். அதன் விளைவு எல்லாத்தையும் இரண்டாம் பாகத்தில் ஒவர் டோஸ் ஆகிவிட்டது. ஆனாலும் வெற்றிமாறன் அழுத்தம் படம் நெடுக தெரிகிறது. அடுத்த சபாஷ் ஒளிப்பதிவு வேல்ராஜ். மிக நேர்த்தி என்பேன். மூன்றவதாய் இளையராஜா. எங்கே அழுத்தம் எங்கே மெளனம் எங்கே காதல் என்பதில் அவர் ஒரு பாடம் நடத்தி இருக்கிறார்.
நடிப்பு என்றால் விஜய் சேதுபதி தவிர வேறு ஒருவர் பெருமாள் வாத்தியாருக்கு இல்லை. அவரின் ஆசிரியர் உடல்மொழி, கம்யூனிஸ்டாக உடல் மொழி, நக்சலாக உடல்மொழி, கைதியாக அவர் நிற்கும் கம்பீரம், கடைசியில் சுடப்பட்டு செத்து விழுந்த பிறகான உடல்மொழி என வாழ்ந்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
படத்தில் இரண்டு கிராம எபிசோட் இருக்கிறது. ஒன்று கூலிக்கான போராட்ட கிராம் இன்னொன்று பெண்களை சூறையாடும் ஜமீன் வகையறா கிராமம். இரண்டுமே கொஞ்சம் அழுத்தம் இல்லாமல் வசனங்களால் கடப்பதால் ரசிகன் கொஞ்சம் அயர்சியில் மூழ்க வாய்ப்பிருக்கிறது.
பெளண்டடு ஸ்கிரிப்ட இல்லாமல் ஒன்லைன் பிடித்து ஷுட்டிங் ஸ்பாட்டில் டெவபலப் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு விடுதலை 2 நல்ல உதாரணம். இது போன்ற கதைகள் டேபிள் ஒர்க் அதிகம். ஆனால் அது கொஞ்சம் மிஸ்ஸிங். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடக்கும் ஒன்றை வசனமாக படத்தில் வைக்கும் போது கொஞ்சம் பகீரென இருக்கிறது. தமிழ் சமூகத்தில் ஜமீன் ஆண்ட பரம்பரை வன்புணர்வுகள் உண்டு. ஆனால் படத்தில் வருவது போல முதலில் நாங்கள் தான் பெண்டாள வேண்டும் என்பது இங்கே நிகழவில்லை.
தமிழகத்தில் தீடீரென புரட்சி அரசியல் பேசும் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.
சிவப்பு கருப்பும் கொடுத்தவை தான் பெரும்பாலும் எல்லாம். அதனை உரக்க பேசி இருக்கிறது. கொஞ்சம் டாகுமெண்ட் வகையறாதான்.. ஆனால் மெய்யழகன் படத்தில் முன்னோர்கள் ( கடந்த காலம் ) எல்லாம் பொற்காலம் என குடித்துவிட்டு செயற்கையாக பேசும் தத்துவத்தோடு ஒப்பீடுகையில், கடைசி விவசாயி முருகன் மாட்டுக்கயிறு என போலியாக பேசிய படத்தோடு ஒப்பீடுகையில் இது முக்கியமான டாகுமெண்ட்.
இதெல்லாம் இப்ப பேசலாமா சார், மக்கள் எல்லாரும் சாதீயை மறந்து இருக்கும் போது...
அட நில்லுங்க பாஸ்.. இதையே பேசக்கூடாது சொல்ற நீங்க இதைவிட ஏன் பல லட்சக்கணக்கான பழசான இதிகாசத்தை தூக்கி சுமக்கும் போது, அதிலும் கூச்சமே இல்லாமல் நந்தன், சம்பூகன் என கொன்றவர்களை நியாயம் செய்து கும்பிடும் போது வரலாற்றில் கூப்பிடும் தூரத்தில் நடந்தவைகளை பேசக்கூடாதா... பேசுவோம். அது நந்தனாக இருந்தாலும் சரி, தங்கலானாக இருந்தாலும் சரி, பரியேறும் பெருமாளாக இருந்தாலும் சரி, பெருமாள் வாத்தியாராக இருந்தாலும் சரி பேசுவோம். குறை இருந்தாலும் கொண்டாடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக